தமிழக அரசியல் வரலாறு
1900களில் இருந்தே முக்கிய சமூக நிகழ்வுகள் தமிழகத்தில் நடந்தாலும் தமிழக அரசியல் களம் 1940களில் சூடு பிடித்தது.இந்தி எதிர்ப்பு போராட்டங்கள், திராவிட கொள்கைகள், பகுத்தறிவு கொள்கைகள், வாரிசு அரசியல், வன்முறை அரசியல் போன்ற கூறுகளுக்கு தமிழக அரசியல் பிரசித்தி பெற்றது. பெரும்பான்மையான அரசியல் கட்சிகள் திராவிட, பொதுவுடமை, சோசலிச கொள்கைகள் கொண்டவையாக விளங்குகின்றன.
காமராஜர், ஈ.வெ.ராமசாமி, அண்ணாதுரை, கருணாநிதி, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா போன்றவர்கள் தமிழக அரசியலில் முக்கியம் வாய்ந்தவர்களாகக் கருதப்படுகின்றனர். ஊழல், காழ்ப்புணர்ச்சி, அரசியல் பகை போன்ற குற்றச்சாட்டுகள் பெரும்பான்மையாக இருந்தாலும், தமிழகத்தின் வளர்ச்சிக்கும், சமூக மாற்றங்களுக்கும் தமிழக அரசியல் முக்கிய ஊன்றுகோலாக இருந்தது என்று சொல்வது மிகையாகாது.
1900 -முதல் - 1947 - வரை
தமிழகத்தின் முதல் அரசியல் கட்சியாக நீதிக்கட்சி விளங்கியது. 1916 ஆம் ஆண்டு பி. தியாகராயர் அவர்களால் தொடங்கப்பட்டது. மதராஸ் மாகாணத்தில் 1920இல் நடந்த தேர்தலில் 98 தொகுதிகளில் 63 தொகுதிகள் வெற்றி பெற்று பெரும்பான்மையாக ஆட்சியைப் பிடித்தது. காங்கிரஸ் கட்சியில் இருந்த பெரியார், இட ஒதுக்கீடு சம்பத்தப்பட்ட கொள்கையில் கருத்து வேறுபாடு காரணங்களினால் நீதிக் கட்சியில் சேர்ந்தார். 1944 ஆம் ஆண்டு நீதிக் கட்சியின் தலைவராக பொறுப்பேற்றார். பின்பு நீதிக் கட்சியை திராவிட கழகம் என்று பெயர் மாற்றினார். அக்கட்சி பின்பு திராவிட கொள்கைகளும், ஹிந்தி எதிர்ப்பு கொள்கைகளும், தனித் திராவிட நாடு கொள்கைகளும் மக்களிடம் பரப்பி கொண்டு வந்தது. ஆட்சி அதிகாரத்தில் விருப்பம் இல்லாமல் இருந்த பெரியாரை விட்டு பிரிந்த அறிஞர் அண்ணா பின்பு திராவிட முன்னேற்ற கழகத்தைத் தொடங்கினார்.
1947 - முதல் - 1962 - வரை
இந்திய சுதந்திரத்திற்கு பின் காங்கிரஸ் அனைத்து மாநிலங்களிலும் ஜனநாயக முறையில் பெரும் வெற்றியைப் பெற்றது.என்று சொல்வது மிகையாகது.
மொழி அரசியல் இக்கால கட்டத்தில் தமிழகத்தில் ஆட்சிப் பொறுப்பேற்ற ராஜாஜி சிறிது காலத்திலேயே கட்சிக்குள்ளே ஏற்ப்பட்ட கருத்து வேறுபாடுகளால் முதலமைச்சர் பதவியை துறந்தார். இதன் பின் முதல்வர் பதவி ஏற்ற காமராஜ் தமிழகத்தில் மிக பெரிய அளவில் கல்வி மற்றும் தொழில் துறையில் பெரும் புரட்சி ஏற்படுத்தினார். இவர் காலத்தில் தொடங்கிய மதிய உணவு திட்டம் இன்று தமிழகம் கல்வியறிவில் சிறந்து விளங்க முக்கிய காரணமாக உள்ளது. இன்று தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிளும் முதல் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு உள்ள அனைத்து மாணவ மாணவிகளுக்கு மதிய உணவு திட்டம் செயல்படுத்தப் படுகின்றது. மேலும் விவசாயம் மற்றும் தொழில் வளம் பெருகிட இந்த ஆட்சி உதவியது. தமிழக அரசியலில் மிக முக்கியமான கல்வி மற்றும் தொழில் வளர்ச்சி இக்காலத்தில் ஏற்பட்டதால் அரசியல் ஆர்வலர்கள், பெரும்பானவர்கள் கட்சி, கொள்கை வேறுபாடின்றி பாராட்டும் 'பொற் கால ஆட்சி' முக்கிய கூறாக விளங்கியது. திராவிட இயக்கத்தில் இருந்து பிரிந்த அண்ணா மற்றும் முத்துவேல் கருணாநிதி 1949ஆம் ஆண்டு திராவிட முன்னேற்ற கழகத்தைத் சென்னை இராயபுரம் ராபின்சன் பூங்காவில் தொடங்கினார்கள். 1952ஆம் ஆண்டு முதல் இந்தி எதிர்ப்பு போராட்டம் பெரியாரால் தொடங்கி வைக்கப்பட்டது.
1962 - முதல் - 1967 - வரை
1965 மற்றும் 1968ஆம் ஆண்டு நடைப்பெற்ற ஹிந்தி எதிர்ப்பு போராட்டங்கள் தமிழக அரசியலில் பெரிய மாற்றங்களை கொண்டு வந்தது. தனி தமிழ்நாடு போராட்டங்கள் 1939 முதல் இருந்தாலும் 1963ஆம் அன்றைய பிரதமர் நேரு கொண்டு வந்த சட்டம் தனிநாடு கேட்கும் கட்சிகளை தடை செய்தது. பின்பு அண்ணா அக்கோரிக்கையை கைவிட்டார். 1960களில் திமுக போராடிய ஹிந்தி எதிர்ப்பு போராட்டங்கள் 1967 தேர்தலில் அவர்களுக்கு பேரும் வெற்றியை கொண்டு வந்தது. அன்று முதல் இன்று வரை திராவிட கட்சிகளே தமிழக ஆட்சி கட்டிலில் அமர்கின்றனர்.
1967 - முதல் - 1971 - வரை
அண்ணா முதலமைச்சர் கட்டிலில் 2 ஆண்டுகள் வகித்தார். இக்காலத்தில் மதராஸ் மாகாணம் என்பது தமிழ்நாடு என்று பெயர் மாற்றப்பட்டது. இரு மொழி கொள்கையும், சுயமரியாதை கல்யாணம், இட ஒதுக்கீடு ஆகியவை சட்டங்களாக இயற்றப்பட்டன. இரண்டே ஆண்டுகள் ஆட்சி செய்தாலும் நிறைய சமூக மாற்றங்களுக்கு இந்த ஆட்சி முக்கிய பங்கு வகித்தது. எம். ஜி. ஆர், எஸ். எஸ். ஆர், கண்ணதாசன், சிவாஜி போன்ற சினிமா பிரபலங்கள் இக்கால கட்டத்தில் அரசியல் களத்தில் புகழ் பெற்றனர். 1969ஆம் ஆண்டு அண்ணா மறைவுக்கு பின்னர் கருணாநிதி முதல்வரானார். இக்கால கட்டத்தில் திமுக கட்சியில் உயர் மட்ட தலைவர்களுக்குள் கருத்து வேறுபாடு எற்பட்டது. கண்ணதாசன், சிவாஜி போன்றோர் அரசியலில் பிரகாசிக்கவில்லையென்றாலும் எம்.ஜி.ஆர் மக்களிடையே மிக பிரபலம் அடைந்தார். பதவி மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகள் போன்ற காரணங்களினால் திமுக-விலிருந்து பிரிந்த எம்.ஜி.ஆர் 1972ஆம் ஆண்டு அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் என்னும் தனி கட்சியை தொடங்கினார்.
1977 - முதல் - 1990 - வரை
தனி கட்சியை ஆரம்பித்த எம்.ஜி.ஆர் 1977 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் பெரும்பான்மையான வெற்றிப் பெற்று தமிழக முதல்வரானார். அவர் ஆண்ட இக்கால கட்டத்தில் நிறுத்தி வைத்திருந்த மதிய உணவு திட்டத்தை மறுபடியும் தொடங்கி வைத்தார். மேலும் உயர் கல்வியிலும் நிறைய மாற்றங்களை கொண்டு வந்தார். இக்கால கட்டத்தில் தமிழ் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டது, மேலும் பல புதிய பொறியியல் கல்லூரிகள், மற்றும் மருத்துவ கல்லூரிகளும் தொடங்க வைக்கப்பட்டன. 1988ஆம் எம்.ஜி.ஆர் மறைந்தவுடன் குறுகிய காலம் அவர் மனைவி ஜானகி ராமச்சந்திரன் முதல்வர் பதவியில் இருந்தார்.
1991 - முதல் - 2006 - வரை
1991 முதல் 1996 வரை ஆண்ட ஜெயலலிதா 1996ஆம் ஆண்டு நடைப்பெற்ற தேர்தலில் பெரும் தோல்வி அடைந்தார். பின்பு 1996 முதல் 2001 வரை கருணாநிதி முதல்வர் பதவி வகித்தார். இக்கால கட்டத்தில் மதிமுக கட்சி உருவானது. பின்பு 2001ஆம் ஆண்டு ஆட்சி பொறுப்பேற்ற அதிமுக 2006 வரை ஆட்சி பொறுப்பில் இருந்தது. சினிமா நடிகர் விஜயகாந்த் தேசிய திராவிட முற்போக்கு கழகம் என்னும் கட்சியை தொடங்கனார். 2006ஆம் ஆண்டு நடைப்பெற்ற தேர்தலில் மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்தது.
2006 - முதல்
தமிழக அரசியலில் முதன் முறையாக பெரும்பான்மை கிடைக்காத காரணத்தினால் திமுக காங்கிரஸ், கட்சியின் உதவியால் கூட்டனி ஆட்சி அமைத்தது.
-- அல்ஃபா தமிழன் --
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக