ஆதிக்க அரசியலை முறியடிப்போம்...

அதிகாரத்தை நோக்கி முன்னேறுவோம்...

தமிழக அரசியலில் மெல்ல கால்பதித்துவரும் மனிதநேய மக்கள் கட்சி முஸ்லிம்களை அரசியலில் திட்டமிட்டு புறக்கணித்து வந்த திராவிட கட்சிகளுக்கு மிகப்பெரும் சவாலாக திகழ்கிறது. தமிழகம் முழுவதும் முஸ்லிம்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட சமுதாயத்தின் முன்னேற்றத்திற்க்காக போராடி வருகின்ற மனிதநேய மக்கள் கட்சியில் சமுதாய சகோதரர்களே ஒன்றினைந்து குரல் கொடுப்போம். நம் சமுதாயத்தின் தனித்தன்மையை சட்டமன்றத்திலும், நாடாளுமன்றத்திலும் சமுதாய பிரதிநிதிகளாய் நிருபிப்போம்.

அழைக்கிறது…. மனிதநேய மக்கள் கட்சி.

புதன், 14 ஜூலை, 2010

தமிழக அரசியல் வரலாறு

1900களில் இருந்தே முக்கிய சமூக நிகழ்வுகள் தமிழகத்தில் நடந்தாலும் தமிழக அரசியல் களம் 1940களில் சூடு பிடித்தது.இந்தி எதிர்ப்பு போராட்டங்கள், திராவிட கொள்கைகள், பகுத்தறிவு கொள்கைகள், வாரிசு அரசியல், வன்முறை அரசியல் போன்ற கூறுகளுக்கு தமிழக அரசியல் பிரசித்தி பெற்றது. பெரும்பான்மையான அரசியல் கட்சிகள் திராவிட, பொதுவுடமை, சோசலிச கொள்கைகள் கொண்டவையாக விளங்குகின்றன.

காமராஜர், ஈ.வெ.ராமசாமி, அண்ணாதுரை, கருணாநிதி, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா போன்றவர்கள் தமிழக அரசியலில் முக்கியம் வாய்ந்தவர்களாகக் கருதப்படுகின்றனர். ஊழல், காழ்ப்புணர்ச்சி, அரசியல் பகை போன்ற குற்றச்சாட்டுகள் பெரும்பான்மையாக இருந்தாலும், தமிழகத்தின் வளர்ச்சிக்கும், சமூக மாற்றங்களுக்கும் தமிழக அரசியல் முக்கிய ஊன்றுகோலாக இருந்தது என்று சொல்வது மிகையாகாது.

1900 -முதல் - 1947 - வரை

தமிழகத்தின் முதல் அரசியல் கட்சியாக நீதிக்கட்சி விளங்கியது. 1916 ஆம் ஆண்டு பி. தியாகராயர் அவர்களால் தொடங்கப்பட்டது. மதராஸ் மாகாணத்தில் 1920இல் நடந்த தேர்தலில் 98 தொகுதிகளில் 63 தொகுதிகள் வெற்றி பெற்று பெரும்பான்மையாக ஆட்சியைப் பிடித்தது. காங்கிரஸ் கட்சியில் இருந்த பெரியார், இட ஒதுக்கீடு சம்பத்தப்பட்ட கொள்கையில் கருத்து வேறுபாடு காரணங்களினால் நீதிக் கட்சியில் சேர்ந்தார். 1944 ஆம் ஆண்டு நீதிக் கட்சியின் தலைவராக பொறுப்பேற்றார். பின்பு நீதிக் கட்சியை திராவிட கழகம் என்று பெயர் மாற்றினார். அக்கட்சி பின்பு திராவிட கொள்கைகளும், ஹிந்தி எதிர்ப்பு கொள்கைகளும், தனித் திராவிட நாடு கொள்கைகளும் மக்களிடம் பரப்பி கொண்டு வந்தது. ஆட்சி அதிகாரத்தில் விருப்பம் இல்லாமல் இருந்த பெரியாரை விட்டு பிரிந்த அறிஞர் அண்ணா பின்பு திராவிட முன்னேற்ற கழகத்தைத் தொடங்கினார்.

1947 - முதல் - 1962 - வரை

இந்திய சுதந்திரத்திற்கு பின் காங்கிரஸ் அனைத்து மாநிலங்களிலும் ஜனநாயக முறையில் பெரும் வெற்றியைப் பெற்றது.என்று சொல்வது மிகையாகது.

மொழி அரசியல் இக்கால கட்டத்தில் தமிழகத்தில் ஆட்சிப் பொறுப்பேற்ற ராஜாஜி சிறிது காலத்திலேயே கட்சிக்குள்ளே ஏற்ப்பட்ட கருத்து வேறுபாடுகளால் முதலமைச்சர் பதவியை துறந்தார். இதன் பின் முதல்வர் பதவி ஏற்ற காமராஜ் தமிழகத்தில் மிக பெரிய அளவில் கல்வி மற்றும் தொழில் துறையில் பெரும் புரட்சி ஏற்படுத்தினார். இவர் காலத்தில் தொடங்கிய மதிய உணவு திட்டம் இன்று தமிழகம் கல்வியறிவில் சிறந்து விளங்க முக்கிய காரணமாக உள்ளது. இன்று தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிளும் முதல் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு உள்ள அனைத்து மாணவ மாணவிகளுக்கு மதிய உணவு திட்டம் செயல்படுத்தப் படுகின்றது. மேலும் விவசாயம் மற்றும் தொழில் வளம் பெருகிட இந்த ஆட்சி உதவியது. தமிழக அரசியலில் மிக முக்கியமான கல்வி மற்றும் தொழில் வளர்ச்சி இக்காலத்தில் ஏற்பட்டதால் அரசியல் ஆர்வலர்கள், பெரும்பானவர்கள் கட்சி, கொள்கை வேறுபாடின்றி பாராட்டும் 'பொற் கால ஆட்சி' முக்கிய கூறாக விளங்கியது. திராவிட இயக்கத்தில் இருந்து பிரிந்த அண்ணா மற்றும் முத்துவேல் கருணாநிதி 1949ஆம் ஆண்டு திராவிட முன்னேற்ற கழகத்தைத் சென்னை இராயபுரம் ராபின்சன் பூங்காவில் தொடங்கினார்கள். 1952ஆம் ஆண்டு முதல் இந்தி எதிர்ப்பு போராட்டம் பெரியாரால் தொடங்கி வைக்கப்பட்டது.

1962 - முதல் - 1967 - வரை

1965 மற்றும் 1968ஆம் ஆண்டு நடைப்பெற்ற ஹிந்தி எதிர்ப்பு போராட்டங்கள் தமிழக அரசியலில் பெரிய மாற்றங்களை கொண்டு வந்தது. தனி தமிழ்நாடு போராட்டங்கள் 1939 முதல் இருந்தாலும் 1963ஆம் அன்றைய பிரதமர் நேரு கொண்டு வந்த சட்டம் தனிநாடு கேட்கும் கட்சிகளை தடை செய்தது. பின்பு அண்ணா அக்கோரிக்கையை கைவிட்டார். 1960களில் திமுக போராடிய ஹிந்தி எதிர்ப்பு போராட்டங்கள் 1967 தேர்தலில் அவர்களுக்கு பேரும் வெற்றியை கொண்டு வந்தது. அன்று முதல் இன்று வரை திராவிட கட்சிகளே தமிழக ஆட்சி கட்டிலில் அமர்கின்றனர்.

1967 - முதல் - 1971 - வரை

அண்ணா முதலமைச்சர் கட்டிலில் 2 ஆண்டுகள் வகித்தார். இக்காலத்தில் மதராஸ் மாகாணம் என்பது தமிழ்நாடு என்று பெயர் மாற்றப்பட்டது. இரு மொழி கொள்கையும், சுயமரியாதை கல்யாணம், இட ஒதுக்கீடு ஆகியவை சட்டங்களாக இயற்றப்பட்டன. இரண்டே ஆண்டுகள் ஆட்சி செய்தாலும் நிறைய சமூக மாற்றங்களுக்கு இந்த ஆட்சி முக்கிய பங்கு வகித்தது. எம். ஜி. ஆர், எஸ். எஸ். ஆர், கண்ணதாசன், சிவாஜி போன்ற சினிமா பிரபலங்கள் இக்கால கட்டத்தில் அரசியல் களத்தில் புகழ் பெற்றனர். 1969ஆம் ஆண்டு அண்ணா மறைவுக்கு பின்னர் கருணாநிதி முதல்வரானார். இக்கால கட்டத்தில் திமுக கட்சியில் உயர் மட்ட தலைவர்களுக்குள் கருத்து வேறுபாடு எற்பட்டது. கண்ணதாசன், சிவாஜி போன்றோர் அரசியலில் பிரகாசிக்கவில்லையென்றாலும் எம்.ஜி.ஆர் மக்களிடையே மிக பிரபலம் அடைந்தார். பதவி மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகள் போன்ற காரணங்களினால் திமுக-விலிருந்து பிரிந்த எம்.ஜி.ஆர் 1972ஆம் ஆண்டு அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் என்னும் தனி கட்சியை தொடங்கினார்.

1977 - முதல் - 1990 - வரை

தனி கட்சியை ஆரம்பித்த எம்.ஜி.ஆர் 1977 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் பெரும்பான்மையான வெற்றிப் பெற்று தமிழக முதல்வரானார். அவர் ஆண்ட இக்கால கட்டத்தில் நிறுத்தி வைத்திருந்த மதிய உணவு திட்டத்தை மறுபடியும் தொடங்கி வைத்தார். மேலும் உயர் கல்வியிலும் நிறைய மாற்றங்களை கொண்டு வந்தார். இக்கால கட்டத்தில் தமிழ் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டது, மேலும் பல புதிய பொறியியல் கல்லூரிகள், மற்றும் மருத்துவ கல்லூரிகளும் தொடங்க வைக்கப்பட்டன. 1988ஆம் எம்.ஜி.ஆர் மறைந்தவுடன் குறுகிய காலம் அவர் மனைவி ஜானகி ராமச்சந்திரன் முதல்வர் பதவியில் இருந்தார்.

1991 - முதல் - 2006 - வரை

1991 முதல் 1996 வரை ஆண்ட ஜெயலலிதா 1996ஆம் ஆண்டு நடைப்பெற்ற தேர்தலில் பெரும் தோல்வி அடைந்தார். பின்பு 1996 முதல் 2001 வரை கருணாநிதி முதல்வர் பதவி வகித்தார். இக்கால கட்டத்தில் மதிமுக கட்சி உருவானது. பின்பு 2001ஆம் ஆண்டு ஆட்சி பொறுப்பேற்ற அதிமுக 2006 வரை ஆட்சி பொறுப்பில் இருந்தது. சினிமா நடிகர் விஜயகாந்த் தேசிய திராவிட முற்போக்கு கழகம் என்னும் கட்சியை தொடங்கனார். 2006ஆம் ஆண்டு நடைப்பெற்ற தேர்தலில் மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்தது.

2006 - முதல்

தமிழக அரசியலில் முதன் முறையாக பெரும்பான்மை கிடைக்காத காரணத்தினால் திமுக காங்கிரஸ், கட்சியின் உதவியால் கூட்டனி ஆட்சி அமைத்தது.

-- அல்ஃபா தமிழன் --

செவ்வாய், 29 ஜூன், 2010

இந்துச் சமுதாய மக்களே! இந்தியாவின் ஒற்றுமையையும், ஒருமைப்பாட்டையும் கட்டிக்காக்க இணைந்து பாடுபடுவோம்

1949ஆம் ஆண்டு டிசம்பர் 23 அன்று முஸலிம்கள் பாபர் மசூதியில் இரவுத் தொழுகையை நிறைவேற்றிவிட்டு வீடுகளுக்குச் சென்றனர். மீண்டும் வைகறைத் தொழுகைக் காக பள்ளிவாசலுக்கு வந்த முஸ்லிம்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. பள்ளிவாசலுக்குள் ராமர், சீதை, இலட்சுமனர் ஆகியோரின் சிலைகள் வைக்கப்பட்டிருந்தன. ராமர் தனது ஜென்மஸ்தானத்தில் அவதரித்து விட்டார் என்று ஒரு கும்பல் கலாட்டாவில் இறங்கியது.

வன்முறைக் கும்பல் பள்ளிவாசலுக்குள் நுழைந்து சிலை களை வைத்ததாக பைஸாபாத் காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. இதன் பின்னர் மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி புரிந்த காங்கிரஸ் அரசுகள் தொழுகைக்குத் தடை விதித்ததிலிருந்து பாபர் மசூதி பிரச்சினை நாட்டில் மிக முக்கியமான பிரச்சினையாக நீடித்து வருகிறது.

‘இராமர் கோயிலை இடித்துக் கட்டப்பட்டதே பாபர் மஸ்ஜித்’ என்ற புளுகு மூட்டையை சூதுவாது அறியாத இந்துக்கள் மனதில் அவிழ்த்துவிட்டு அவர்களில் பலர் அந்தப் பொய்யை நம்புகின்ற நிலையும் ஏற்பட்டுள்ளது.

இராமருக்காகக் கட்டப்பட்ட கோவில் ஒன்று அயோத்தியில் இருந்து அதை இடித்து விட்டு அந்த இடத்தில் பாபர் மசூதி கட்டப்பட்டது’ என்ற சங்பரிவாரத்தின் வாதம் உண்மையாக இருந்தால் பாபர் மசூதிக்காக எந்த முஸ்லிமும் போராடமாட்டார். பிறருக்குச் சொந்தமான இடத்தை ஆக்கிர மிப்புச் செய்து அதில் பள்ளிவாசல் கட்டுவதை இஸ்லாம் அனுமதிக்கவில்லை.பாபர் மசூதி பற்றி சங்பரிவாரத்தினரின் வாதங்கள் முற்றிலும் பொய்யாக இருப்பதால் தான் பாபர் மசூதிக்காக முஸலிம்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

இராமர் என்று ஒருவர் வாழ்ந்ததற்கு எந்த ஆதாரமும் இல்லை என்று சட்டர்ஜி, ஏ.கே. மஜும்தார், நேரு உள்ளிட்ட பல தலைவர்கள் கூறியுள்ளதன் அடிப்படையில் இராமர் கற்பனைப் பாத்திரம் என்று கூறி பிரச்சினையை நாம் திசை திருப்ப மாட்டோம்.ஏனெனில் அந்த இடத்தில் இராமர் கோவில் இருந்ததா? அது பாபரால் இடிக் கப்பட்டதா? அந்த இடத்தில் பள்ளிவாசல் கட்டப்பட்டதா என்பதுதான் பிரச்சினையே தவிர இராமர் கற்பனைப் பாத்திரமா வரலாற்றுப் பாத்திரமா என்பது அல்ல.இராமர் கற்பனைப் பாத்திரமாகவே இருந்தாலும் அவருக்காகக் கட்டப்பட்ட கோவிலை பாபர் இடித்திருந்தால் அது தவறு என்பதை எந்த முஸலிமும் மறுக்க மாட்டார்.

அயோத்தியில் ராமர் பிறந்தாரா?

அயோத்தியில், அதுவும் பாபர் மசூதி கட்டப்பட்டிருந்த இடத்தில்தான் இராமர் பிறந்தார் என்ற வாதம் எந்த அளவுக்குச் சரியானது என்பதைக் காண்போம்.இராமரைப் பற்றி இந்துக்கள் எந்த முடிவு எடுப்பதாக இருந்தாலும் சங்பரிவா ரத்தினரின் கூற்றுக்களின் அடிப்படையில் எடுக்கக் கூடாது. இந்து மதப் புராணங்களை மேற்கோள் காட்டியே முடிவு செய்ய வேண்டும். அவ்வாறு இல்லாமல் மனம் போக்கில் யாரேனும் இராமரைப் பற்றி முடிவு செய்தால் அது அவரது முடிவாகத்தான் இருக்குமே தவிர இந்து மதத்தின் முடிவாக இருக்க முடியாது.இராமரைப் பற்றி முதன் முதலில் வால்மீகி என்பவர் சமஸ்கிருத மொழியில் இராமாயணத்தை எழுதினார். இராமரைப் பற்றி அதில் கூறப்பட்ட விஷயங்கள் தான் இராமரைப் படம் பிடித்துக் காட்டும் கண்ணாடியாகும்.வால்மீகி இராமாயணத்தில் இராமர் பிறந்ததைப் பற்றிக் கூறும்போது, ‘அவர் திரேதா யுகத்தில் பிறந்தார் என்று கூறப் பட்டுள்ளது.இந்துக்களின் கால அளவை முறையில் யுகம் என்பது காலத்தை அளக்கும் பெரிய அலகுகளில் ஒன்று. யுகங்கள் நான்கு.

அவை:

* கிருத யுகம் 17,28,000 (பதினேழு இலட் சத்து இருபத்து எட்டாயிரம்) ஆண்டுகள் கொண்டது.

* திரேதா யுகம் 12,96,000 (பன்னிரெண்டு இலட்சத்து தொண்ணூற்று ஆறாயிரம்) ஆண்டுகள் கொண்டது.

* துவாபர யுகம் 8,64,000 (எட்டு இலட்சத்து அறுபத்து நான்காயிரம்) ஆண் டுகள் கொண்டது.

* கலியுகம் 4,32,000 (நான்கு இலட்சத்து முப்பத்து இரண்டாயிரம்) ஆண்டுகள் கொண்டது) என்பனவாகும்.

அதாவது கிருத யுகத்தில் பாதி அளவு கொண்டது திரேதா யுகம். திரேதா யுகத்தில் பாதி அளவு கொண்டது துவாபர யுகம். துவாபர யுகத்தில் பாதி அளவு கொண்டது கலியுகம்.இப்போது நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் காலம் கலியுகம். கலியுகம் கிறிஸ்து பிறப்பதற்கு 3102 வருடங்களுக்கு முன் துவங்குகிறது. இயேசுவுக்குப் பின் 2008 ஆண்டுகள் ஆகின்றன. இதன்படி கலியுகம் துவங்கி 5110 ஆண்டுகள் நடக்கிறது. இந்த யுகத்தில் இராமர் பிறக்கவில்லை.

கலியுகத்துக்கு முந்திய யுகம் தூவாபர யுகம். இந்த யுகத்திலும் இராமர் பிறக்க வில்லை.இந்த யுகத்துக்கும் முந்திய யுகம்தான் திரேதா யுகம். இந்த யுகத்தின் கடைசி வருடத்தில் இராமர் பிறந்திருந்தார் என்று வைத்துக் கொண்டால் கூட 8,64,000 + 5,110 = 8,69,110 எட்டு இலட்சத்து அறுபத்து ஒன்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தான் இராமர் பிறந்தார் என்பது வால்மீகி இராமாயணத்தின் தீர்ப்பு.

இராமர் பிறந்த காலம் பற்றி வால்மீகி இராமாயணம் கூறுவது போலவே அவர் பிறந்த ஊர் பற்றி கூறும்போது, ‘இராமர் அயோத்தி என்னும் பட்டணத்தில் பிறந் தார்’ எனக் கூறுகிறது.அப்படியானால் எட்டு இலட்சத்து அறுபத்து ஒன்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அயோத்திப் பட்டணம் இருந்தி ருக்க வேண்டும்.ஆனால் உ.பி.யில் உள்ள அயோத்தி எப்போது தோன்றியது என்று பல விதமான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டதில், மத்திய அரசாங்கத்தின் தொல் பொருள்துறை சார்பில் அயோத்தியை ஆய்வு செய்து 1976, 77ல் ஒரு அறிக்கையைச் சமர்ப்பித்தனர். அந்த அறிக்கையின் 52, 53 ஆகிய பக்கங்களில் ‘அயோத்தி என்ற ஊர் உண்டானதும், அதில் மக்கள் வசிக்கத் தொடங்கியதும் கி.மு. 700ல்தான் இருக்க முடியும்’ எனக் குறிப்பிடுகின்றார்.அதாவது 2708 ஆண்டுகளுக்கு முன்னர் அயோத்தி என்ற இந்த ஊர் இருந்திருக்க எந்த முகாந்திரமும் இல்லை என்று அவர்களின் அறிக்கை கூறுகிறது.

இதன் பின்னர், சி.பி.லால், கே.என். தீட்சித் ஆகிய வரலாற்று வல்லுனர்கள் 1979, 80ல் இதை மறு ஆய்வு செய்தனர். தொல்பொருள் துறையினரின் மேற்கொண்ட முடிவு சரியானதே என்று அவர்கள் கண்டுபிடித்தனர்.

அயோத்தியில் எட்டு இலட்சத்து அறுபத்து ஒன்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன் இராமர் பிறந்தார் என்று வால்மீகி கூறுகிறார். ஆனால் ராமர் பிறந்ததாகச் சொல்லப்படும் அந்தக் காலத்தில் அயோத்தி என்ற இந்த ஊர் இருந்த தில்லை என்பது தெளிவாகிறது.இராமாயணத்தையும் மறுக்காமல், தொல்பொருள் அறிஞர்களின் கண்டுபிடிப் புகளையும் மறுக்காமல் ஒரு முடிவுக்கு வருவதாக இருந்தால் என்ன முடிவுக்கு இந்துக்கள் வர வேண்டும்?

இந்த அயோத்தியின் வயது 2708 ஆண்டுகளாக இருக்கலாம். ஆனால் ராமாயணத்தில் கூறப்பட்ட அயோத்தி இது அல்ல. வேறு ஏதோ ஒரு பகுதியில் அந்த அயோத்தி இருந்திருக்கலாம். ஒரு பெயரில் பல ஊர்கள் இருப்பது சாதாரண மானதுதான் என்ற முடிவுக்குத்தான் அவர்கள் வரவேண்டும். அப்போதுதான் நடைமுறை உண்மைக்கு முரணில்லாமலும், இராமாயணத்தை மறுக்காமலும் முடிவு எடுத்ததாக அமையும்.‘இராமர் பிறந்தது இந்த அயோத்தி அல்ல; வேறு அயோத்திதான்’ என்பதற்கு இராமாயணத்திலேயே இன்னும் பல சான்றுகள் உள்ளன.

அயோத்தியைப் பற்றி பேசும் வால்மீகி இராமாயணம் சரயூ நதியைப் பற்றியும் கூறுகிறது. சரயூ நதி அயோத்தியில் இருந்து ஒன்றரை யோஜன் தூரத்தில் உள்ளது என்று கூறுகிறது. ஒன்றரை யோஜன் என்பது இன்றைய கணக்குப்படி 23 கிலோ மீட்டர் ஆகும்.ஆனால் இப்போது நாம் அயோத்தி சென்று பார்த்தால் சரயூ என்ற பெயரில் ஒரு நதி அங்கே ஓடினாலும், அது அயோத்திலேயே ஓடுகிறது. அயோத்தியில் இருந்து 23 கி.மீ. தொலைவில் அது இல்லை.

அப்படியானால் இராமாயணத்தில் கூறப்படும் அயோத்தியும் சரயூ நதியும் இது அல்ல. வேறு ஏதோ ஒரு பகுதியில் அயோத்தி என்ற பெயரில் ஒரு ஊரும், அதிலிருந்து 23 கி.மீ தொலைவில் சரயூ என்ற பெயரில் ஒரு நதியும் இருந்திருக்க வேண்டும் என்று நம்பினால்தான் இராமா யணம் கூறுவது மெய்யாகும்.”இந்த அயோத்திதான் அந்த அயோத்தி” என்று கூறுவது இராமாயணத்தை மறுத்து இந்து மதத்தையே மறுப்பதாக ஆகிவிடும்.

அதுபோல் சரயூநதி கங்கை எனும் பெருநதியில் சங்கமம் ஆகிறது என்று வால்மீகி இராமாயணம் குறிப்பிடுகிறது. ஆனால் உ.பி.யில் உள்ள சரயூ நதி கங்கையில் சங்கமம் ஆகவில்லை. மாறாக ராப்தி எனும் நதியில் சங்கமமாகிறது. இதிலிருந்து தெரிய வருவது என்ன? இராமாயணம் குறிப்பிடுவது இந்த அயோத்தியையோ, இந்த சரயூ நதியையோ அல்ல என்பதுதான்.மேலும் சரயூ நதி கிழக்கிலிருந்து மேற்கு நோக்கிப் பாய்வதாக வால்மீகி ராமாயணம் வர்ணிக்கிறது. ஆனால் உ.பி. யில் உள்ள சரயூ நதி மேற்கிலிருந்து கிழக்கு நோக்கிப் பாய்கிறது.

அதை ஆய்வு செய்த ஷேர்சிங் என்ற ஆய்வாளர் ஒரு உண்மையைக் கண்ட றிந்து வெளிப்படுத்தியுள்ளார்.நேபாளத்தில் ஒரு அயோத்தி உள்ளது. அதிலிருந்து 20 கி.மீ தொலைவில் ஒரு நதி ஓடுகிறது. அது கிழக்கிலிருந்து மேற்கு நோக்கிப் பாய்கிறது. மேலும் அது கங்கையில் சங்கமம் ஆகிறது என்று அவர் கண்டுபிடித்துள்ளார்.எனவே இராமர் பிறந்த அயோத்தி உ.பி.யில் உள்ள அயோத்தி என்று யாராவது நம்பினால் அவர்கள் இராமாயணத்தை மறுத்தவர்களாகின்றனர்.இராமாயணத்தில் கூறப்படும் அடையாளங்களும், தன்மைகளும் எந்த அயோத்திக்குப் பொருந்துகிறதோ அந்த அயோத்திதான் இராமர் பிறந்த அயோத்தி என்று முடிவு செய்வதுதான் இந்துமதத்தின் ஆதாரத்தால் நிரூபிக்கப்பட்ட தாகும்.

அயோத்தியில் இராமர் கோவில் இருந்ததா?

பாபர் மசூதி 1528ல் கட்டப்பட்டது. மீர்பாகி என்ற பாபரின் தளபதி அங்கிருந்த ராமர் கோவிலை இடித்துவிட்டு அந்த இடத்தில் கோவிலைக் கட்டினார்! என்ற வாதத்திலாவது உண்மை உள்ளதா என்றால் அதிலும் உண்மை இல்லை.இந்த இராமர் கோவிலை விக்கிரமா தித்த மன்னர் கட்டினார் என்று சங்பரிவா ரத்தினர் கூறுகின்றனர். விக்கிரமாதித்தன் என்பது சோழன், பாண்டியன் போன்ற பொதுப் பெயராகும். சந்திர குப்தர், சமுத்திர குப்தர் உள்ளிட்ட குப்த மன்னர்கள் தான் விக்கிரமாதித்தன் என்ற பெயரால் குறிப்பிடப்படுகின்றனர்.

அவர்களில் இராமர் கோவிலைக் கட்டிய மன்னர் யார் என்பதைப் பற்றி பலவறாக முரண்பட்டுக் கூறுகிறார்கள். கோவிலைக் கட்டிய விக்கிரமாதித்தன் யாராக வேண்டுமானாலும் இருக்கட்டும். அவர்களின் கூற்று பொய் என்பதில் ஐயம் இல்லை.குப்த மன்னர்கள் உ.பி.யில் சில பகுதி களை ஆட்சி செய்த காலம் கி.பி. 300 முதல் கி.பி. 1100 வரையாகும். இந்த எண்ணூறு ஆண்டுகளில் ஆட்சி செய்த குப்த மன்னர்களே விக்கிரமாதித்தன் எனப்படு கின்றனர்.

கி.பி. 300 முதல் 1100 வரை அயோத்தி என்று கூறப்படும் நகரில் மனித சஞ்சாரமே இருந்ததில்லை. இந்திய தொல் பொருள் இலாகாவின் தலைவர்பி.பி. லால், 1975ல் சமர்ப்பித்த ஆய்வ றிக்கை ‘தி வீக்’ (25.02.90) எனும் ஆங்கில ஏட்டிலும் ‘சன்டே டைம்ஸ்’ (20.11.87) ஏட் டிலும் வெளியிடப்பட்டது. இந்த அறிக்கையில் பலவிதமான ஆதாரங்களை எடுத்துக் காட்டி அயோத்தி எனப்படும் அந்தப் பகுதியில் குப்தர்கள் ஆட்சி செய்த 300 லி 1100 வரையிலான கால கட்டத்தில் எந்த மனிதனோ, கட்டடமோ, கோவிலோ, வேறு எதுவுமோ இருந்த தில்லை” என்று அடித்துக் கூறுகிறார்.‘மனிதர்கள் வாழாத இடத்தில் குப்தர்கள் கோவில் கட்டினார்கள்’ என்று கூறுவது பொய் என்பது இதிலிருந்து நிரூபணமாகிறது. இல்லாத கோவிலை பாபர் எப்படி இடித்திருப்பார் என்பதை இந்து நண்பர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்?

இராமர் கடவுளாகக் கருதப்பட்டது எப்போது?

இராமருக்குக் கோவில் கட்டுவது என்றால் அவரை இந்துக்கள் கடவுளாகக் கருதத் தொடங்கிய பிறகுதான் கட்டுவார்கள். இராமரைக் கடவுள் என்று இப்போது இந்துக்கள் நம்பினாலும் ஆரம்பத்தில் இந்துக்கள் அவ்வாறு நம்பவில்லை. குறிப்பாக, கோவில் கட்டப்பட்டதாக சங்பரிவாரர் கூறும் 300, 1100 குப்தர் காலத்தில் இராமர் கடவுள்களில் ஒருவராகக் கருதப் படவில்லை.கி.பி. ஆறாம் நூற்றாண்டில் அமர சிம்ஹ என்பவர் ‘அமர கோஷா’ என்ற பெயரில் சமஸ்திருத கலைக் களைஞ்சியத்தை வெளியிட்டுள்ளார். அதில் இந்தியாவில் கடவுளாகக் கருதப்பட்டவர்கள் என்ற பட்டியல் உள்ளது. அந்தப் பட்டியலில் இராமர் இல்லை. அந்தக் காலகட்டத்தில் இந்துக்கள் இராமரைக் கடவுளின் அவதாரமாகக் கருதவில்லை என்பதற்கு இது ஆதாரமாகவுள்ளது.

லட்சுமிதர் என்பவர் புனித யாத்திரைத் தலங்கள் என்ற பெயரில் 11 ஆம் நூற்றாண்டுவரை, அதாவது குப்தர்களின் கடைசிக் காலம்வரை இந்தியாவில் இருந்த புனிதத் தலங்களைப் பட்டியல் போட்டுள்ளார். அந்தப் பட்டியலில் அயோத்தியின் இராமர் கோவில் இல்லை.குப்தர் ஆட்சியில் இராமர் கோவில் கட்டப்பட்டது உண்மை என்றால் அந்த ஆலயம் ஏன் புனித யாத்திரைத் தலங்கள் பட்டியலில் இடம் பெறவில்லை?

அதுபோல் எஸ்.எஸ். ஐயர் என்ற ஆய்வாளர், ‘இந்தியக் கோவில்கள், கட்ட டக்கலை, சரித்திரக் குறிப்புக்கள்’ என்ற நூலை வெளியிட்டுள்ளார். அதில் அயோத்தியின் இராமர் கோவில் பற்றி அவர் கூறவில்லை. விக்கிரமாதித்தன் கட்டிய கோவில்கள் என்ற தலைப்பில் ஐந்து கோவில்களைக் குறிப்பிட்டுள்ளார். அதில் அயோத்தியின் இராமர் கோவில் இல்லை.

.ஏ.எஸ் அதிகாரியான ராமச்சந்திர கத்ரி என்பவர் 1989 நவம்பர் 12 தேதியிட்ட ‘ரேடியன்ஸ்’ பத்திரிகையில் கட்டுரை ஒன்றை வெளியிட்டார். என்சைக்ளோ பீடியா பிரிட்டானிகா உள்ளிட்ட பல ஆதாரங்களைக் காட்டி, கி.பி. 1100க்குப் பிறகுதான் இராமரைக் கடவுள் என்று கருதி வழிபடும் நிலை உருவானது எனக் கூறுகிறார்.அதாவது கடைசி விக்ரமாதித்த மன்னர் காலம் வரை ராமர் என்பவர் இந்துக்களின் கடவுள்களின் அவதாரங்களில் ஒருவராக வணங்கப்படவில்லை.கடவுளாகக் கருதப்படாதவருக்கு குப்தர்கள் கோவில் கட்டினார்கள் என்று மனசாட்சி உள்ள இந்துக்கள் நம்ப முடியுமா?

இன்னும் தெளிவாகச் சொல்வதானால், வால்மீகி எழுதிய இராமாயணம் சமஸ் கிருத மொழியில்தான் இருந்தது. சமஸ்கி ருதம் மக்களின் பேச்சு மொழியாக இருக்கவில்லை. பிராமனப் பண்டிதர்கள் மட்டுமே அறிந்த மொழியாகத்தான் இருந்தது. எனவேதான் இராமர், மக்களால் கடவுளாகக் கருதப்படவில்லை.மக்கள் பேசுகின்ற இந்தி மொழியில் துளசிதாசர் என்பவர் இராமாயணத்தை மொழி பெயர்த்து வெளியிட்டார். இதன் பின்னர்தான் இராமாயணம் மக்கள் அறியும் காப்பியமாக ஆனது. துளசி தாசர் இந்தியில் ராமாயணம் வெளியிட்ட பின்பு தான் இராமர் கடவுள் அவதாரம் என்று மக்களால் கருதப்பட்டார்.

துளசி தாசர் காலம் என்ன?

எந்தக் காலத்தில் இராமர் கோவில் இடிக்கப்பட்ட தாகக் கூறுகிறார்களோ, எந்தக் காலத்தில் பாபர் ஆட்சி புரிந்தாரோ, அதே காலத்தில் தான் துளசி தாசரும் வாழ்கிறார். அதுவும் அயோத்தியில் வாழ்கிறார். 1500 களில்தான் பாபர் ஆட்சி புரிகிறார். அந்த ஆட்சியின் கீழ்தான் துளசி தாசரும் வாழ்கிறார்.இராமாயணம் இந்தி மொழியில் ஆக்கப்பட்டதே பாபர் காலத்தில்தான் என்பதும், பாபர் காலத்தில் இராமர் கடவுளாகக் கருதப்படவுமில்லை. இந்து மக்கள் அவரைப் பற்றி அறிந்திருக்கவும் இல்லை என்பது இதன் மூலம் உறுதியாகிறது.இராமாயணமே இந்தியில் மக்கள் மத்தியில் பரவாத காலத்தில் இராமர் எப்படி கடவுளாகக் கருதப்பட்டிருப்பார்? எப்படி அவருக்குக் கோவில் கட்டபட்டிருக்கும் என்பதை நியாயவுணர்வுள்ள இந்துக்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

இந்தியாவில் முதல் ஜனாதிபதியாகப் பொறுப்பேற்றவர் டாக்டர். ராதா கிருஷ்ணன். இவரது மகன் சர்வபள்ளி கோபால் இந்து பக்திமானும் மிகச்சிறந்த ஆராய்ச்சியாளருமாவார்.இவர் ராமர் ஆலயம் பற்றிய ஆய்வுக் கட்டுரையில் ”கி.பி. 1750க்கு முன்பு வரை இந்தியாவில் இராமருக்காக எந்தக் கோவி லும் எந்தப் பகுதியிலும் இருந்ததில்லை. ராமர் கோவில்கள் அனைத்தும் 18ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவைகளே” எனத் திட்டவட்டமாக அறிவிக்கிறார்.200 ஆண்டுகளுக்கு முன்னால் இராமர் கோவில்களே இந்தியாவில் இருக்கவில்லை என்றால் 1528ல் இல்லாத இராமர்கோவிலை பாபர் எப்படி இடித்திருப்பார் என்று நடுநிலையாளர்கள் சிந்திக்கக் கோருகிறோம்.

உண்மை என்னவென்றால் பாபர் மசூதிக்கு அடிக்கல் நாட்டியவர் இப்ரா ஹிம் லோடியாவார். இவர் 1524ல் பள்ளி வாசலுக்கான அடிக்கல் நாட்டினார். தொடர்ந்து அவர் அப்பணியைத் தொடர வில்லை. இப்ராஹிம் லோடியைக் கொன்றுவிட்டு அப்பகுதியைக் கைப்பற் றிய பாபர், 1528ல் அந்த அடித்தளத்தின் மீது பாபர் பள்ளியைக் கட்டினார். எனவே பாபர் கோவிலை இடித்தார் என்று கூறு வது முழுப் பொய் என்பது இதன் மூல மும் தெளிவாகிறது.பாபர் கோவிலை இடிப்பவரா?இதுவரை நாம் எடுத்துக் காட்டிய ஆதாரங்கள் மட்டுமே அறிவுடைய மக்களுக்குப் போதுமானதாகும். ஆயினும், ஒரு வாதத்துக்காக அங்கே கோவில் இருந்தாலும் பாபர் அதை இடித்திருக்க மாட்டார்.

ஏனெனில், இதே அயோத்தியில் ஹனுமான்கிரி, ஜென்மஸ்தான் உள்ளிட்ட ஐந்து கோவில்களுக்கு செப்புப் பட்டயத் தில் எழுதி பாபர் மானியம் வழங்கியுள் ளார். அந்தக் கோவில்களின் நிர்வாகம் அதை நன்றியுடன் பாதுகாத்து வருகின்றன என்று ராம்ரக்ஷா திரிபாதி என்பவர் தக்க சான்றுகளுடன் தெளிவுபடுத்தியுள்ளார்.கோவில்களுக்கு மானியம் வழங்கிய ஒருவர் எப்படி கோவிலை இடிப்பார் என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்?மேலும் பாபர் ஆட்சி புரிந்தபோது முஸலிம்களின் சதவிகிதம் இப்போதுள்ள தைவிட பன்மடங்கு குறைவாகவே இருந்திருக்கும். பெரும்பான்மை மக்களின் எதிர்ப்பு இல்லாமல் இருந்தால்தான் ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ள முடியும். பெரும்பான்மை மக்களின் வழி பாட்டுத் தலத்தை பாபர் இடித்திருந்தால் அப்போதே மாபெரும் மக்கள் புரட்சி ஏற்பட்டு பாபர் விரட்டியடிக்கப்பட்டிருப்பார். பதவியைத் தக்க வைத்துக்கொள்ளும் நிலையில் உள்ள எந்த மனிதனும் இதுபோன்ற காரியங்களைச் செய்யவே மாட்டார்.பாபர், அவரது மகன் ஹிமாயூன், அவரது மகன் அக்பர் என்று வாழையடி வாழையாக எவ்விதப் புரட்சியும் வெடிக்காமல் ஆட்சி நீடித்தது என்றால் இந்துக்கள் வெறுப்படையும்படி அவரது ஆட்சி அமையவில்லை என்பது தெளிவாகவில்லையா?

பாபர் தமது கடைசிக் காலத்தில் தனது மகன் ஹிமாயூனுக்கு பாரசீக மொழியில் ஓர் உயில் எழுதினார். அந்த உயில் மத்திய அரசின் தொல்பொருள் துறையின் கட்டுப்பாட்டில் டெலலியில் உள்ள தேசிய அருங்காட்சியகத்தில் இன்றளவும் பாதுகாக்கப்பட்டு வருகின்றது. அந்த உயிலில்,”மகனே! இந்துக்கள் பெரும்பான்மை யாகவுள்ள ஒரு நாட்டை நீ ஆளப் போகிறாய். இந்துக்கள் பசுவைத் தெய்வமாக மதிக்கின்றனர். எனவே எக்காரணம் கொண்டும் பசுவின் மாமிசத்தை உண்ணாதே! அதனால் இந்துக்கள் உன்னை வெறுத்து விடுவார்கள்” என்று மகனுக்கு அறிவுரை கூறியுள்ளார்.இந்துக்கள் வெறுத்து விடக்கூடாது என்பதற்காக பசுவின் மாமிசத்தையே தவிர்த்துக் கொள்ளச் சொன்ன பாபர், கோவிலை இடித்திருக்க முடியும் என்று சிந்தனையுள்ள யாராவது நம்ப முடியுமா?

பாபர் காலத்தில் அவரது முதல் எதிரியாக இருந்தவர் குருநானக். இவர்தான் சீக்கிய மதத்தின் நிறுவனர். இவர் பாபரை கடுமையாக எதிர்த்து வந்தார். குறிப்பாக பெண்கள் தொடர்பான குற்றச்சாட்டுகள் போன்றவற்றைத்தான் அவர் குறிப்பிடுகிறார். பாபர் கோவிலை இடித்திருந்தால் அதை குருநானக் கட்டாயம் குறிப்பிடாமல் இருக்க மாட்டார். அது மட்டுமின்றி குருநானக் அயோத்திக்கு வந்து பாபர் மசூதியைப் பார்வையிட்டு ரசித்திருக்கிறார் என்று அவரது வரலாறு கூறுகிறது.கோவிலை இடித்து பாபர் பள்ளிவாசல் கட்டியிருந்தால் அந்தக் காலத்தில் வாழ்ந்த அவருக்குத்தான் அது நன்றாகத் தெரியும். கோவிலை இடித்துக் கட்டிய பள்ளிவாசலை அவர் ஒருக்காலும் ரசித்திருக்க மாட்டார்.

பாபர் கொடுங்கோலர் என்பதால் பயந்து கொண்டு விமர்சனம் செய்யாமல் மக்கள் இருந்திருக்கலாம் என்று பொய்யாகக் கற்பனை செய்து சிலர் கூறுகின்றனர்.பாபர் கொடுங்கோலராகவோ, இந்துக்களால் வெறுக்கப்பட்டவராக இருக்கவில்லை என்பதே உண்மை. ஒரு வாதத்துக்காக பாபர் கொடுங்கோலர் என்று வைத்துக் கொண்டாலும் இவர்களின் வாதம் சரியானது அல்ல.பாபருக்குப் பின் அவரது மகன் ஹீமாயூன் ஆட்சி செய்கிறார். பாபர் இறந்து 25 ஆண்டுகளில் அவரது பேரன் அக்பர் ஆட்சிக்கு வருகிறார். இவர் இஸ்லாத்தை விட்டு விலகி, தீனே இலாஹி என்ற புதிய மதத்தை உருவாக்கினார். சங்பரிவாரத்தினர் பாராட்டும் அளவுக்கு இந்துச் சார்புடைய மன்னராக இருந்தார் அக்பர்.கோவிலை பாபர் இடித்திருந்தால் அதை நேரில் பார்த்த பலரும் அக்பர் காலத்தில் வாழ்ந்திருப்பார்கள். அக்பருக்கு அவர்கள் அஞ்சத் தேவையில்லை. ”உங்கள் தாத்தா இடித்த கோவிலைக் கட்டித் தாருங்கள்” என்று ஒரு வார்த்தை சொன்னால் அப்போதே அக்பர் அதைச் செய்திருப்பார். இடித்திருந்தால்தானே கேட்டிருப்பர்கள்? அப்படி எந்தச் சம்பவமும் நடக்கவில்லையே.அதுதான் போகட்டும்! முஸலிம்களின் ஆட்சி முடிவுக்கு வந்து வெள்ளையர்கள் ஆட்சி நடத்தினார்களே! அந்தக் காலம் முதல் நாடு விடுதலை அடைந்த 1948 வரை இதுபற்றி எந்த வழக்கோ, பிரச்சினையோ இருந்ததா என்றால் அறவே இல்லை.வெள்ளையர்களின் 200 ஆண்டு கால ஆட்சியிலும்”கோவிலை இடித்துவிட்டார்கள்; அதை எங்களிடம் தாருங்கள்” என்று வழக்கு ஏதும் பதிவாகவில்லை. ஒர் காலகட்டத்தில் இந்து முஸலிம் பகைமை மிகவும் உச்சத்தில் இருந்தது. அந்தக் காலத்தில்கூட இதுபோன்ற பிரச்சினை எதுவுமில்லை.

1949 டிசம்பர் 23ல் சிலைகளைப் பள்ளி வாசலில் வைத்து பிரச்சினையை முதன் முதலாகத் துவங்கும்வரை இராமர் கோவில் என்ற எந்த விவகாரமும் இருக் கவில்லை.இன்னும் சொல்வதாக இருந்தால் அயோத்தியில் இராமர் பிறந்த இடம் என்ற பெயரில் 30 கோவில்கள் இன்றளவும் உள்ளன. இராமர் பிறந்த இடம் என்று பல இடங்களைக் குறிப்பிட்ட இந்துக்கள் பாபர் மசூதியையும் அதில் ஒன்றாகக் குறிப்பிடவில்லை.1949ல் சங்பரிவாரம் புளுகு முட்டையை அவிழ்த்து விடும்வரை இதுதான் நிலைமை.

எனவே மக்களின் வெறியைக் கிளறி விட்டு அதன் மூலம் ஆட்சியைக் கைப்பற்றலாம் என்று திட்டமிட்டுத்தான் இந்தப் பொய்யைப் பரப்பினார்கள். வெளுத்ததெல்லாம் பால் என்று நம்பும் வெள்ளை மனம் படைத்த இந்து மக்களை ஏமாற்றி வளர்ந்து ஆட்சியையும் பிடித்தார்கள்.

இந்துச் சமுதாய மக்களே! இந்தியாவின் ஒற்றுமையையும், ஒருமைப்பாட்டையும் கட்டிக்காக்க இணைந்து பாடுபடுவோம். பொய்களைப் பரப்பி நமக்கிடையே பகையை விதைப்பவர்களைப் புறக்கணிப்போம்.

ஞாயிறு, 6 ஜூன், 2010

தமிழகத்தில் கள் இறக்க அனுமதி அளிக்கக்கூடாது மனித நேய மக்கள் கட்சி ஆர்பாட்டம்.

1937 ஆண்டுகளின் ஆங்கிலேய ஆட்சி காலத்தில் சீமை சாராய ஒழிப்பு போராட்டதை முன்னின்று நடத்திய காங்கிரஸ் கட்சி மத்தியிலும், மதுவிலக்கை கொள்கையாய் வைத்திருந்த தந்தை பெரியார், அண்ணா வழியையும், கொள்கையையும் பின்பற்றும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் கலைஞர் ஆட்சி மாநிலத்திலும் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இவ்வேளையில், மது ஆறாக தமிழகத்தில் ஒடிக்கொண்டிருக்கிறது.

மதுவின் வருமானத்தில் தான் ஆட்சியே நடக்கிறது என்று கூறும் கேவலமான சூழ்நிலையை மனித நேய மக்கள் கட்சி வண்மையாக கண்டிப்பதுடன், மாநிலத்தில் உடனடியாக மதுவிலக்கை அமுல்படுத்த வேண்டும் என்பதுடன் 46 சதவிதம் மக்கள் மது நோயாளிகள் ஆகிவிட்ட நிலையில், உழைக்கும் மக்களையும் தாழ்த்தப்பட்ட மக்களையும் சுயமரியாதையை பறிக்கு நோக்கத்தில், மக்களை மது நோயாளிகளாக ஆக்கும் நோக்கத்தில் கள் இறக்க அனுமதி கோருவதையும் வன்மையாக கண்டித்தும்.

கோவையில் பொது மக்களுக்கும் வியாபாரிகளுக்கும் மிகவும் இடையூராக உள்ள உக்கடம், பொருமாள் கோவில் வீதி, செல்வபுரம் தெற்கு மற்றும் போத்துனூர் ஆட்டுதொட்டி ஆகிய இடங்களில் உள்ள டாஸ்மாக் கடைகளை உடனடியாக அப்புறப்படுத்த கோரியும் ஆர்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மமக மாவட்ட துணைச்செயலாளர் ஷாஜகான், தலைமை தாங்கினர். தலைமை கழக பேச்சாளர் கோவை செய்யது கண்டன உரை ஆற்றினார், சமத்துவ முன்னணி நிர்வாகி தோழர் கார்க்கி, மாவட்ட தமுமுக தலைவர் அப்துல் பஷிர், மமக மாவட்ட செயளாளர் சுல்தான் அமீர், மமக மாவட்ட பொருளாளர் டிஎம்எஸ் அப்பபாஸ், மமக மாவட்ட இளைஞர் அணி செயலாளர் அப்பாஸ், தமுமுக மாவட்ட பொருளாளர் கபிர், ஜபார், கவிஞர் ஹக், ஜபார்சாதிக், இளைஞர் அபு, நிஷார், காஜா, மற்றும் பொள்ளாச்சி நகர நிர்வாகிகள், தமுமுக, மமக, கிளை, நகரம், மாவட்ட நிர்வாகிகள் உட்பட 500க்கும் மேற்பட்டோர்கள் கலந்து கொண்டனர்.

ஞாயிறு, 9 மே, 2010

துடிப்பாய் களப் பணியாற்றியவர்கள், துடியாய் துடித்து உயிர் விட்டிருக்கிறார்கள். சாலையில் சிதறிய உடல்கள் ஒரே நிமிடத்தில் முடிந்துபோனது வாழ்க்கை! உருக்கமான பின்னணி தகவல்கள்


மே-5 அன்று சுட்டெரிக்கும் வெயிலில் த.மு.மு.க தலைமையகத்திலிருந்து நீதிமன்றம் நோக்கி பேரணி முன்னேறிக் கொண்டிருந்தது. அப்போது சுமார் 11.30 மணியளவில் ஊட்டியிலிருந்து வந்த செய்தி எல்லோரையும் நிலைகுலைய வைத்தது.




கரூர் மாவட்டம் சிந்தாமணிப் பட்டி அருகே தேசிய நெடுஞ்சாலையில் நிகழ்ந்த அதி கொடூர விபத்தில் ஊட்டியைச் சேர்ந்த 6 ம.ம.கவினர் சம்பவ இடத்திலேயே துடிதுடிக்க உயிர் துறந்தார்கள் என்ற செய்தி அனைவரையும் உலுக்கியது.
சென்னையில் பேரணிக்கு வந்தவர்கள் கைதாகிக் கொண்டிருக்கும்போது, அவர் களுக்கு இச்செய்தி பரவியதால் பலர் களத்திலேயே கண் கலங்கி, யாராவது உயிர் பிழைப்பார்களா? என பிரார்த்திக் கொண்டே இருந்தனர்.




மமக&வின் நீலகிரி மாவட்டச் செயலாளர், ஆற்றல் மிகு செயல்வீரர் ஷேக் அப்துல்லாஹ் (42), அதிர்ந்து கூட பேசத் தெரியாத ஊட்டி நகர செயலாளர் செய்யது சாதிக் (37) உறுப்பினர்கள் யூனூஸ் (எ) அப்துல்கனி (42) யாசர் (22) மதீன் (32) சைபுதீன் (36), ஆகியோரின் பெயர்கள் அடுத்தடுத்து உயிரிழந்தோர் பட்டியலில் வர, சற்று நேரத்தில் ஊடகங்களில் இது முதன்மை செய்தியானது.


கோடை வாசஸ்தலமான ஊட்டி சோகத்தில் மூழ்கியது. அந்த குடும்பங்கள் எல்லாம் மீளாத் துயரில் துடிக்க, ஆங்காங்கே வியாபாரிகள் கடைகளை மூடி விட்டு கட்சி அலுவலகத்திற்கும் உயிரிழந்தவர்களின் வீடுகளுக்கும் படையெடுத்தனர்.





களத்தில் ஆலோசனை

சென்னை பேரணியின் முடிவில் பல நிர்வாகிகள், கைதாகி சென்று விட்டதால் களத்தில் இருந்த ஜே.எஸ்.ரிபாயி, மமக நிர்வாகிகள் ஹாரூன் ரஷீத், தமிமுன் அன்சாரி ஆகியோர் அடுத்தக் கட்ட ஆலோசனை செய்தனர். த.மு.மு.க மாநிலச் செயலாளர் கோவை.உமர் தலைமையில் ஒரு குழு கரூர் சென்று உடல்களை பெற்றுக் கொள்வது என்றும், மமக துணைப் பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி உடன் விமானம் மூலம் கோவை சென்று இன்னொரு குழுவுடன் ஊட்டிக்குச் சென்று மற்ற வேலைகளைப் பார்ப்பது என்றும் முடிவானது.

விபத்துச்செய்தி தமிழகம் முழுக்க பரவியதால், சமுதாய மக்களும், பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் தலைமை நிர்வாகிகளை தொடர்புக்கொண்ட படியே இருந்தனர்.


கோவை.உமர் தலைமையில் த.மு.மு.க துணைசெயலாளர் சாதிக், கோவை மாவட்ட த.மு.மு.க, ம.ம.க. நிர்வாகிகள் விரைந்து கரூர் நோக்கி சென்றுக் கொண்டிருக்க, கரூர் மற்றும் ஈரோடு மாவட்ட நிர்வாகிகள் சம்பவ இடத்திற்கு சென்று தகவல்களை தந்துக் கொண்டிருந்தனர்.



விபத்து நடந்தது எப்படி?


காலை 10.40 மணியளவில் இவர்களின் கார் கரூர் நெடுஞ்சாலையில் சென்றுக் கொண்டிருக்க, எதிரே வந்த ஜல்லி லாரியின் அச்சு முறிந்ததால் அந்த லாரி வந்த வேகத்தில் கட்டுப்பாடு இழந்து, கார் மீது மோதியிருக்கிறது.




மிருகம் ஒன்று பாய்ந்து, பாய்ந்து குதறுவது போல், அந்த 10 சக்கரம் லாரி, மோதிய வேகத்தில் தீய்த்துக் கொண்டே இழுத்துச் சென்று சுவரில் மோத... ஒரே நிமிடத்தில் அலறல் சப்தத்துடன் எல்லாம் முடிந்துப் போயிருக்கிறது.



துடிப்பாய் களப் பணியாற்றிய வர்கள், துடியாய் துடித்து உயிர் விட்டிருக்கிறார்கள்.

அவர்களின் அலறல் இச்சம்பவத்தை பார்த்த அனைவரையும் பேரதிர்ச்சியில் உறைய வைத்திருக்கிறது.
இன்னும் கொஞ்சம் நகர்ந்திருந்தால் 30 அடி ஆழக்கிணற்றுக்குள் கார் விழுந்திருக்கும். இந்த உடல்களும் கூட மேலும் குதறப்பட்டிருக்கும்.

உடல்கள் மீட்பு


ஓடிப்போய் உதவ முயன்றவர்கள், உடல்கள் சிதறிக்கிடந்ததைப் பார்த்து இயலாமையால் தவிக்க, செய்தியறிந்து சப்&இன்ஸ்பெக்டர் இளங்கோ தலைமையில் காவலர்கள் விரைந்து வந்தனர்.



அதற்குள் லாரி ஓட்டுனரும், கிளீனரும் தப்பி காவல் நிலையத்தில் சரணடைந்திருக்கிறார்கள்.




காவலர்கள் அகற்ற முடியாத அளவுக்கு உடல்கள் நசிந்ததால், தீயணைப்பு படை வரவழைக்கப்பட்டது. அவர்கள் காரின் பாகங்களை வெட்டி, உடைத்து ஒருவர் பின் ஒருவராக ஒவ்வொரு உடலையும் மீட்டெடுத்துள்ளனர். போராடியே பழகிய சகோதரர்களின் உடல்கள் பெரும் போராட்டத்திற்கு பின்னரே மீட்கப்பட்டது. பலரின் உடல்களில் சில பாகங்களே இல்லை!! யார்... யாருக்கோ ரத்தம் கொடுத்து உதவியர்களின் ரத்தம் லிட்டர், லிட்டராய் கொட்டி உறைந்துக் கிடந்தது.



பிறர் நலனுக்காகவே ஓடி, ஓடி உழைத்தவர்களின் உடல்கள் உருக்குலைந்த நிலையில் வரிசையாய் கிடத்தப்பட்டது. ஆம்புலன்ஸ்கள் வந்ததும் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டது-கூடியிருந்த பொதுமக்கள் பலர் இதைப் பார்த்து உருகியிருக் கிறார்கள். செய்தியறிந்து அ.தி.மு.க.வின் முன்னாள் மாவட்டச் செயலாளர் சாகுல் ஹமீது, விடுதலை சிறுத்தைகள் மாவட்ட செயலாளர் பகலவன் மற்றும் டி.என்.டி.ஜே. அமைப்பை சேர்தவர்களும் மருத்துவமனைக்கு வந்திருக்கிறார்கள். சேலம், திருச்சி, திருப்பூர், ஈரோடு மாவட்ட த.மு.மு.க, மமக&வினரும் அங்கே குழும, மருத்துவமனையே அனுதாப அலைகளால் சூழப்பட்டது.


ஊட்டியை நோக்கி இறுதி பயணம்

ஒவ்வொருவரின் உடல்களுக்கும் பிரேத பரிசோதனைகள் நடக்க; கோவை.உமர் தலைமையிலான குழுவிடம் மாலை 7 மணிக்கு உடல்கள் ஒப்படைக்கப்பட்டது. சேலம், ஈரோடு, கோவை, மாவட்டங்களை சேர்ந்த த.மு.மு.க வின் 6 ஆம்புலன்ஸ்களில் உடல்கள் ஏற்றப்பட்டு ஊட்டி நோக்கி அனைவரும் புறப்பட்டனர்.



அதற்குள் ம.ம.க துணைப்பொதுச் செயலாளர் தமிமுன் அன்சாரி, தலைமையிலான குழுவினர் ஊட்டியில் ஒவ்வொருவர். வீட்டிற்கும் சென்று ஆறுதல் கூறிவிட்டு ஜனாஸா அடக்கம் குறித்தும் அவர்களோடு விவாதித்தனர்.



வழியெங்கும் சோகம்
ஆறு ஆம்புலன்ஸ்களும் ஒன்றன்பின் ஒன்றாக அலறியப்படியே வந்துக் கொண்டிருக்க... விபத்து செய்தி ஏற்கனவே பரவியிருந்ததால் வழியெங்கும் பொதுமக்கள், கடந்து போன வாகனங்களை வேதனையோடு பார்த்திருக்கிறார்கள்.


திருப்பூர் வந்ததும் தேனீருக்காக ஆம்புலன்ஸ் ஓட்டுனர்கள் வண்டியை நிறுத்த வேண்டி வந்த போது, அங்கு ஆம்புலன்ஸ்கள் நிறுத்தப்பட, இச்செய்தியறிந்த திருப்பூர் மக்கள் சாரை, சாரையாக ஓடி வந்து ஆம்புலன்ஸ்களை


வண்டியிலிருந்தவாரே ஜனாஸாக்களை பார்த்து உருகி யிருக்கிறார்கள். இதே போன்று அவினாசியிலும் மக்கள் கூட்டம் கூடி; தடுத்து, ஜனாஸாக்களை பார்வையிட்ட பிறகு அனுப்பி வைத்தனர்.





நள்ளிரவு 11.30 மணியளவில் 6 ஆம்புலன்ஸ்களும் ஊட்டியின் மலைத் தொடர்களில் சீறியபடியே ஏறி வர, அந்த இரவும்; அமைதியான சூழலும் துக்கத்தை இரட்டிப் பாக்கி விட்டது. இரவு 1.30 மணியளவில் ஊட்டி பெரிய பள்ளிவாசலில் ஆம்புலன்ஸ்கள் வரிசையாக வரவும், அந்த குளிரிலும் நூற்றுக் கணக்கான பொதுமக்கள் திரண்டு வந்து ஜனாஸாக்களை வண்டியிலிருந்தவாரே பார்த்தனர். எல்லா உடல்களும் உருக்குலைத்து இருந்ததால், ஒவ்வொரு ஜனாஸா வும் யாருடையது என தெரியாமல் மக்கள் பரிதவித்து மேலும், மேலும், சோகமாக இருந்தது. 10 நிமிடங்களில் அவரவர் இல்லங்களுக்கு ஜனாஸாக்கள் எடுத்து செல்லப்பட்டது,

அலைமோதிய கூட்டம்

அவர்களது வீடுகளில் இருந்த ஜனாஸாக்களை அடுத்த நாள் (மே-6 அன்று) காலை 8.30 மணியளவில் ஒவ்வொன்றாக எடுத்து வரப்பட்டு பெரிய பள்ளிவாசல் வளாகத்தில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டது.


ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, கூடலூர் உள்ளிட்ட நீலகிரியின் மலைவாழ் கிராமங்களிருந்தும் மக்கள் கூட்டம், கூட்டமாய் வந்தனர். சுற்றுலா வந்திருந்த முஸ்லிம்களும், த.மு.மு.க, ம.ம.க&வை சேர்ந்தவர்களும் செய்தியறிந்து ஜனாஸாக்களை பார்க்க வந்திருந்தனர். கூட்டம் கூடிக் கொண்டே போக, அந்த முக்கிய சாலையை அதிகாரிகள் மூடி போக்குவரத்தை நிறுத்தினர். ஆயிரக்கணக்கான ஆண்களும், பெண்களும் சாரை, சாரையாக கண்ணீர் மல்க பார்வையிட்டுக் கொண்டேபோக 10 மணிக்கெல்லாம், 10 ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் கூடிவிட நிலைமை கட்டுக் கடங்காமல் போனது.


கூட்ட நெரிசலில் ஒரு பெண் மூச்சுதிணறி விழுந்ததால் இனியும், ஜனாஸாக்களை பார்வையிட அனுமதிக்க கூடாது என முடிவு செய்யப்பட்டது. ஜனாஸாக்களை சுற்றிலும் கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்ட நிர்வாகிகள் அரணாக சுற்றி நின்று மக்களை ஒழுங்குப் படுத்திக்கொண்டிருந்தார்கள்.


10 மணியானாதும் தொழுகைக்கு எல்லோரும் தயாரானார்கள் சமுதாய மக்கள் ‘ஒழு’ செய்வதற்காக தங்கள் வீடுகளிலிருந்து தண்ணீர் கொடுத்து உதவி தங்கள் ஆறுதலை வெளிப்படுத்திக் கொண்டார்கள். இதில் ஏராளமான பிற சமுதாய மக்களும் மிகுந்த ஈடுபாட்டோடு பங்கெடுத்து உதவி செய்தார்கள்.


பள்ளிவாசலும் நிரம்பி, அந்த குறுக்கு தெருவும் நிரம்பி, வெளியே பல ஆயிரம் மக்கள் தொழுகைக்கு தயாரானதால் சாலை மறிக்கப்பட்டு தொழுகை நடந்தது. ஆங்காங்கே சுவர்கள், வீடுகளில் பொது மக்கள் கூட்டம், கூட்டமாக சோகத்துடன் நின்றுக் கொண்டிருந்தார்கள்.




கண்ணீரும் வற்றிப்போனதே...

தொழுகை முடிந்ததும் ஒவ்வொரு ஆம்புலன்ஸிலும் தனித்தனியாக உடல்கள் ஏற்றப்பட்டு கபரஸ்தான் நோக்கி 3 கிலோ மீட்டர் தூரம் இறுதிஊர்வலம் தொடங்கியது. ஆயிரக்கணக்கானோர் அணி வகுத்தனர்.
வழி எங்கிலும் பொதுமக்கள் இரங்களுடன் நின்று கொண்டிருக்க குண்டூசி விழும் சப்தம் கேட்கும் அமைதியுடன் அன்பு சகோதரர்களின் ஜனாஸாக்கள் சென்றது.





ஊட்டி படகு ஏரிக்கு அருகில் 12.30 மணியளவில் ஜனாஸாக்கள் அடக்கப்பட்டன. கனத்த இதயங்களுடன் கூடியிருந்த ஆயிரக்கணக்கான மக்களும் அந்த சகோதரர்களை மனதில் சுமந்தவாரே பிரிந்து செல்ல தொடங்கினர்.




சமுதாயத்திற்கு உணர்வுகளை ஊட்டி வந்தவர்களை இழந்து ஊட்டி தவிக்கிறது. ஆற்றல்மிகு நிர்வாகிகளையும், ஊழியர்களையும் இழந்து ம.ம.க துடிக்கிறது. இறைவன் மிகப்பெரியவன். அவனே ஆறுதல் தரும் ஆற்றல் கொண்டவன்.

புதன், 28 ஏப்ரல், 2010

திருபனந்தாலில் மனிதநேய மக்கள் கட்சியின் மாபெரும் பொதுக் கூட்டம்.

தஞ்சை வடக்கு மாவட்டம் திருபனந்தாலில் மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் 15.04.2010 அன்று அம்பேத்கார் சிந்தனைகளும், ஒடுக்கப்பட்டோரின் அரசியலும் என்ற தலைப்பில் மாபெரும் பொதுக் கூட்டம் நடைபெற்றது. மனிதநேய மக்கள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் எம். தமிமுன் அன்சாரி, ம.ம.க உயர்நிலைக் குழு உறுப்பினரும் தமுமுக பொதுச் செயலாளருமான செ. ஹைதர் அலி ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.
இக்கூட்டத்திற்கு திருபனந்தால் ஒன்றிய தமுமுக செயலாளர் ஏ. அப்துல் நாசீர் தலைமை தலைமை தாங்கினர்.


ம.ம.க மாவட்ட நிர்வாகிகள், சம்சுதீன், உமர் ஜஹாங்கீர், பீ. ராஜ் முகம்மது, சரணவன். தமுமுக மாவட்ட நிர்வாகிகள் முகம்மது செல்லப்பா, மௌலவி. நஜிமுதீன் வாஹிதீன், சல்லி நசீர், ம.ம.க ஒன்றியச் செயலாளர் ஹைதர் அலி, திருபன்தால் நகரச் செயலாளர் கஜினி முகம்மது உள்ளிட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.

முஸ்லிம்களுக்கு உடனே இடஒதுக்கீடு வழங்கக்கோரி புதுச்சேரியில் மனிதநேய மக்கள் கட்சி ஆர்ப்பாட்டம்.

புதுச்சேரி மாநிலத்தில் முஸ்லிம்களுக்கு தனி இடஒதுக்கீடு வழங்காமல் காலதாமதப்படுத்தும் புதுச்சேரி மாநில அரசைக் கண்டித்து புதுவை மாநில மனிதநேய மக்கள் கட்சி சார்பாக இன்று புதுச்சேரியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. புதுச்சேரி மறைமலை அடிகள் சாலையில் சுதேசி மில் அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ம.ம.க. புதுச்சேரி மாவட்டச் செயலாளர் அஷ்ரப் தலைமை தாங்கினார்.

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் கண்டன உரையாற்றிய ம.ம.க. தலைமை ஒருங்கிணைப்பாளர் எம்.ஹெச்.ஜவாஹிருல்லாஹ், “புதுச்சேரியில் முஸ்லிம்களுக்கு இடஓதுக்கீடு அளிக்காமல் வைத்தியலிங்கம் அரசு தேவையில்லாமல் காலம் தாழ்த்தி வருகிறது. புதுவை முதல்வர் வைத்தியலிங்கம் தனது சொந்த ஊரான நெட்டப்பாக்கத்தில் அமைந்துள்ள பள்ளிவாசலில் இன்றுவரை பாங்கு ஒலி எழுப்ப தடை இருப்பதற்கு காரணமாக இருக்கின்றார். பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களிடையே மோதலை உருவாக்குவதற்காக முஸ்லிம்களுக்கு பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பட்டியலில் இருந்து 1.5 விழுக்காடும் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு 1 விழுக்காடும் இடஒதுக்கீடு அளிக்கப்படும் என்று அறிவித்தார். இது நடைமுறையில் சாத்தியமில்லாத ஒன்று மட்டுமின்றி சட்டசிக்கலும் நிறைந்ததாகும். ஆனால் முஸ்லிம்களும் பிற பிற்படுத்தப்பட்ட சமூகத்தினரும் ஒன்று சேர்ந்து வைத்தியலிங்கத்தின் சதியை முறியடித்தோம். தொடர்ந்து புதுவையில் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு கோரி பல்வேறு வகையில் போராட்டம் நடத்திவிட்டோம். இனியும் நாம் காத்திருக்க முடியாது. தற்போது நடைபெற்று வரும் புதுவை சட்டமன்றத் தொடரில் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்கும் அரசாணை வெளியிட வேண்டும். இல்லையெனில் புதுவை மாநில முதல்வர் வைத்தியலிங்கத்தின் இல்லத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும். இதன் பின்பும் இடஒதுக்கீடு வழங்காவிட்டால் தமிழகத்திற்குள் அவரை நுழைய விடாமல் தடுக்கும் போராட்டத்தை நடத்துவோம். இதேபோல் மறைமுகமாக முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீட்டிற்கு எதிர்ப்பு தெரிவிப்போர் இல்லத்தையும் முற்றுகையிடுவோம்” என உரையாற்றினார். மேலும் ‘மீனவர்களுக்கு தனி இடஒதுக்கீடு வழங்க கோரியும் ம.ம.க. போராட்டம் நடத்தும்’ என்றும் அவர் அறிவித்தார்.
கண்டன ஆர்ப்பாட்டத்தில மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் பி. அப்துல் சமது, தமுமுக துணைச் செயலாளர் எஸ்.எம்.ஏ. ஜின்னா, மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் புதுவை சுகுமாரன், கிராம பஞ்சாயத்து தலைவர்களின் ஒருங்கிணைந்த கூட்டமைப்பு சார்பில் ஜெகன்நாதன் சிங்காரவேலர் முன்னேற்ற கழக செயலாளர் செ. சந்திரன், சிந்தனை சிற்பி சமூக சேவை சங்கத்தின் செயலாளர் இரா. குமரன், சலவைத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் முத்து, மக்கள் சிவில் உரிமைக் கழகத்தின் தலைவர் இரா. அவிமன்னன், புதுச்சேரி மாணவர் கூட்டமைப்பின் அமைப்பாளர் சி.சூ. சாமிநாதன், சமூக ஆர்வலர் ச. மூர்த்தி, பெரியார் தி.க. இளைஞரணி செயலாளர் செ. சுரேஷ், ஒட்டர் நலச் சங்கத்தின் செயலாளர் முருகன் ஆகியோரும் கண்டன உரை ஆற்றினார்கள். ஆயிரக்கணக்கான மக்கள் ஆர்ப்பாட்டத்தில் பங்குகொண்டனர்.