இந்தியில் பதவியேற்பு- எம்எல்ஏவை அறைந்த ராஜ் தாக்கரே கட்சி எம்எல்ஏக்கள்
மும்பை: மகாராஷ்டிர சட்டசபையில் இந்தியில் பதவிப்பிரமாணம் எடுத்துக் கொண்ட, சமாஜ்வாடிக் கட்சி எம்.எல்.ஏ. அபு ஆஸிம் ஆஸ்மியை ராஜ் தாக்கரேவின் மகாராஷ்டிர நவ நிர்மான் கட்சி எம்.எல்.ஏக்கள் ஆவேசத்துடன் தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
மகாராஷ்டிர சட்டசபைக்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏக்கள் மராத்தியில்தான் பதவிப்பிரமாணம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று ராஜ் தாக்கரே கட்சி ஏற்கனவே எச்சரித்திருந்தது.
ஆனால் தான் இந்தியில்தான் பதவியேற்பேன் என்று அபு ஆஸிம் ஆஸ்மி கூறியிருந்தார். அப்படியானால் ஆஸ்மி உ.பிக்குப் போக வேண்டும், இங்கு இருக்கக் கூடாது. இந்தியில் பதவியேற்றால் தடுத்து நிறுத்துவோம் என ராஜ் தாக்கரே கட்சி மிரட்டியிருந்தது.
இதனால் பரபரப்பு நிலவி வந்தது. இந்த நிலையில் இன்று சட்டசபையில் புதிய எம்.எல்.ஏக்கள் பதவியேற்பு நிகழ்ச்சி நடந்தது.
அப்போது, ஆஸ்மி பதவியேற்க வந்தபோது ஏற்கனவே அறிவித்தபடி இந்தியில் பதவிப்பிரமாணம் எடுத்தார்.
இதையடுத்து மகாராஷ்டிர நவ நிர்மான் கட்சியைச் சேர்ந்த 13 எம்.எல்.ஏக்களும் திரண்டு அவரிடம் விரைந்தனர். அவர் முன்பு இருந்த மைக்கைப் பறித்தனர்.
ஆஸ்மிக்கு எதிராக கோஷமிட்டனர். மராத்தியில் பதவியேற்குமாறு கோபத்துடன் கூறினர். அப்போது ராஜ் தாக்கரே கட்சி எம்.எல்.ஏ ராம் கதம் ஆஸ்மியை அறைந்து விட்டார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து அரை மணி நேரத்திற்கு சபை ஒத்திவைக்கப்பட்டது.
சபையில் அமைதியை ஏற்படுத்த முதல்வர் அசோக் சவானும், அமைச்சர் அஜீத் பவாரும் படாதபாடுபட்டனர்.
மீண்டும் அவை கூடியதும் தாக்குதல் நடத்திய 4 ராஜ் தாக்கரே கட்சி எம்எல்ஏக்கள் மீது அவை உரிமை மீறல் தீர்மானம் கொண்டு வரப்பட்டு சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு:
இந் நிலையில் கடந்த சனிக்கிழமை பதவி ஏற்றுக் கொண்ட அமைச்சர்களுக்கான இலாகாக்கள் இன்று அறிவிக்கப்பட்டன.
காங்கிரசைச் சேர்ந்த முதல்வர் அசோக் சவான் வசம் பொது நிர்வாகம், ஊரக வளர்ச்சி, செய்தித் துறை ஆகியவை இருக்கும்.
தேசிவாத காங்கிரஸைச் சேர்ந்த துணை முதல்வர் சகன் பூஜ்பலுக்கு பொதுப்பணித் துறை ஒதுக்கப்பட்டுள்ளது.
ஆர்.ஆர்.பட்டீலுக்கு உள்துறை அமைச்சர் பதவி தரப்பட்டுள்ளது. மும்பையில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியபோது அவர் இந்தத் துறையின் அமைச்சராக இருந்தார். தாக்குதலையடுத்து அந்தப் பதவியை ராஜினாமா செய்தார். இப்போது மீண்டும் அவருக்கு அதே உள்துறை வழங்கப்பட்டுள்ளது. இதை தேசியவாத காங்கிரஸ் கோரி வந்தது குறிப்பிடத்தக்கது.
முதல்வர் பதவிக்குப் போட்டியிட்ட நாராயணன் ரானேவுக்கு வருவாய்த்துறை ஒதுக்கப்பட்டுள்ளது.
தேசியவாத காங்கிரஸ் தலைவரும் சரத்பவாரின் சகோதரி மகனுமான அஜித் பவாருக்கு மின்துறை வழங்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிர தேர்தலில் வென்ற காங்கிரஸ்- தேசியவாத காங்கிரஸ் கூட்டணி இடையே அமைச்சரவையில் இடம் ஒதுக்குவதில் ஏற்பட்ட சிக்கலால் பதவி ஏற்பதில் தாமதம் ஏற்பட்டது நினைவுகூறத்தக்கது.
இறுதியாக காங்கிரசுக்கு 23 இடங்களும், தேசியவாத காங்கிரசுக்கு 20 இடங்களும் ஒதுக்கீடு செய்யப்பட்டு பிரச்சனை தாற்காலிகமாக தீர்க்கப்பட்டுள்ளது.
--தட்ஸ்தமிழ்--