வாலிகண்டபுரம்: அடக்கஸ்தலத்தில் புதைக்க உரிமை மறுப்பு!தமுமுக முயற்சியால் முறியடிப்பு!!
பெரம்பலூருக்கு அருகே சென்னை செல்லும் பைபாஸ் சாலையில் அமைந்துள்ளது வாலிகண்டபுரம் கிராமம். முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசிக்கும் இக்கிராமத்தில் 2 பள்ளிவாசல்கள் உள்ளன. மேலும் 2 ஏக்கர் 70 சென்ட் பரப்பளவுடைய முஸ்லிம்களின் அடக்கஸ்தலம் ஒன்றும் உள்ளது. ஆனால் முஸ்லிம்களின் கபரஸ்தான் நிலத்தை ஆக்கிரமித்த சிலர் கபரஸ்தான் நிலத்துக்கு உரிமை கோரி நீதிமன்றங்களில் வழக்கு தொடர்ந்தனர்.
1981ல் முன்சீப் கோர்ட், 1987 மாவட்ட உரிமையியல் நீதிமன்றம், 1991ல் கூடுதல் அமர்வு நீதிமன்றம் என அனைத்து நீதிமன்றங்களும், 'நிலம் முஸ்லிம்களுக்கே சொந்தம்' என தீர்ப்பளித்தன. எனினும் அதிகார வர்க்கத்தை கையில் போட்டுக் கொண்ட ஆக்கிரமிப்பாளர்கள் முஸ்லிம்களின் உடலை அடக்கம் செய்ய அனுமதி மறுத்து வந்தனர்.இந்நிலையில் 2009ம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் முஸ்லிம்கள் வழக்கு தொடர்ந்து கபரஸ்தானில் அடக்கம் செய்ய அனுமதி கோரினர். உயர்நீதிமன்றமும் அனுமதி அளித்தது. எனினும் 2 முறை ஜனாஸாக்களை அடக்கம் செய்ய முயன்றபோதும் ஆர்.டி.ஓ. மற்றும் காவல்துறையினரைத் தூண்டிவிட்டு அடக்கம் செய்யவிடாமல் தடுத்தனர் ஆக்கிரமிப்பாளர்கள்.அதிகாரிகளும் 'பீஸ் மீட்டிங்' என்ற பெயரில் முஸ்லிம்களின் உரிமையைத் தொடர்ந்து மறுத்து வந்தனர்.
இந்நிலையில் கடந்த 11.10.09 அன்று இறந்த ஒருவரது உடலை அடக்கம் செய்ய சென்றபோது ஆக்கிரமிப்பு சக்திகளின் அடிவருடிகளான ஆர்.டி.ஓ. மற்றும் காவல்துறையினர் அங்கு வந்து முஸ்லிம்களை அடக்கம் செய்யவிடாமல் தடுத்தனர். இதனால் ஜமாத்தினர் தமுமுக மாவட்டத்தலைவர் மீரான் மைதீனுக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து தமுமுக நிர்வாகிகள் அங்கு விரைந்து வந்தனர். எனினும் வெளியூர்காரர்கள் என்று தமுமுக நிர்வாகிகளுக்கு பீஸ் மீட்டிங்கில் அனுமதி மறுக்கப்பட்டது.
மேலும் இந்த ஒரு தடவை இங்கு அடக்கம் செய்யாதீர்கள், அடுத்த தடவை நாங்கள் அடக்கம் செய்ய ஏற்பாடு செய்கிறோம் என்று உயர்நீதிமன்ற ஆணையை மதிக்காமல் சமரசம் பேசினர் அதிகாரிகள். எனினும் தமுமுகவினர் உஷார்படுத்தியதால் ஜமாத்தினர் இந்த சூழ்ச்சிக்கு அடிபணியவில்லை.மாவட்ட நிர்வாகிகள் தமுமுக பொதுச் செயலாளர் ஹைதர் அலி அவர்களுக்கு தகவல் தெரிவித்தனர். பொதுச் செயலாளர், தொலைபேசி மூலம் ஆர்.டி.ஓ.விடம் பேசினார். எனினும் ஆக்கிரமிப்பாளர்களுக்கு உதவுவதிலேயே உறுதியாக நின்றனர் அதிகாரிகள். இதையடுத்து பொதுச் செயலாளரின் உத்தரவின் பேரில் பெரம்பலூர் மாவட்டம் முழுவதிலும் இருந்து தமுமுகவினர் குவிய ஆரம்பித்தனர்.
இப்பிரச்சினைக்கு இறுதி முடிவைக் காணவும், முஸ்லிம்களின் உரிமையினை மீட்டெடுக்கவும் தமுமுக தலைமை முடிவெடுத்தது. திருச்சி, கடலூர், விழுப்புரம் மாவட்ட தமுமுகவினருக்கும் தகவல் அளிக்கப்பட்டு அவர்களும் பெரம்பலூர் நோக்கி கிளம்ப ஆயத்தமாயினர். பொதுச் செயலாளரும் நேரடியாக சம்பவ இடத்திற்கு வருகிறேன் என்று சென்னையிலிருந்து புறப்பட, செய்தி பெரம்பலூர் மாவட்ட ஆட்சியருக்கு சென்றது. அவர் உடனடியாக பெரம்பலூர் மாவட்ட எஸ்.பி. இல்லாததால், அரியலூர் மாவட்ட எஸ்.பி. நஜ்முல் ஹுதாவை, பிரச்சினையை சமாளிக்கக் கோரினார். போலீஸ் படையும் குவிக்கப்பட்டது.
தமுமுக மாவட்டத் தலைவர் மீரான் மைதீன், மாவட்டச் செயலாளர் தாஹிர் பாஷா, ம.ம.க. மாவட்ட செயலாளர் சுல்தான் மைதீன் தலைமையில் தமுமுக மாவட்ட, நகர, கிளை நிர்வாகிகள் சம்பவ இடத்தில் திரண்டிருந்தனர். பல்வேறு சமுதாய அமைப்பின் நிர்வாகிகளும் வந்திருந்தனர். எனினும் முஸ்லிம் தரப்பு ஆவணங்களையும், உயர்நீதிமன்றத்தின் ஆணையையும் பார்த்த எஸ்.பி. நஜ்முல் ஹுதா, முஸ்லிம்கள் அந்த இடத்திலேயே அடக்கம் செய்து கொள்ள அனுமதி அளித்தார். இதனால் ஜனாஸா, முஸ்லிம்களின் கபரஸ்தானிலேயே அடக்கம் செய்யப்பட்டது.
முஸ்லிம்களின் ஒற்றுமையையும், தமுமுகவினரின் போராட்டக் குணத்தை யும் பார்த்த அதிகாரிகளும், ஆக்கிரமிப்பு சக்திகளும் திகைத்து நின்றனர்.பல ஆண்டுகளுக்குப் பிறகு தங்களுக்குச் சொந்தமான நிலத்தில் அடக்கம் செய்த மகிழ்ச்சியில் ஜமாத்தினர் தமுமுகவினருக்கும், தமுமுக தலைமைக்கும் நன்றி கூறினர்.
மேலும் எதிர்வர இருக்கும் மாவட்ட ஆட்சியருடனான சந்திப்பின் போதும், பிரச்சினைகளின் போதும் அனைத்து சமுதாய அமைப்புகளும் ஒன்றிணைந்து பிரச்சினைகளை எதிர்கொள்வது என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக