ஆதிக்க அரசியலை முறியடிப்போம்...

அதிகாரத்தை நோக்கி முன்னேறுவோம்...

தமிழக அரசியலில் மெல்ல கால்பதித்துவரும் மனிதநேய மக்கள் கட்சி முஸ்லிம்களை அரசியலில் திட்டமிட்டு புறக்கணித்து வந்த திராவிட கட்சிகளுக்கு மிகப்பெரும் சவாலாக திகழ்கிறது. தமிழகம் முழுவதும் முஸ்லிம்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட சமுதாயத்தின் முன்னேற்றத்திற்க்காக போராடி வருகின்ற மனிதநேய மக்கள் கட்சியில் சமுதாய சகோதரர்களே ஒன்றினைந்து குரல் கொடுப்போம். நம் சமுதாயத்தின் தனித்தன்மையை சட்டமன்றத்திலும், நாடாளுமன்றத்திலும் சமுதாய பிரதிநிதிகளாய் நிருபிப்போம்.

அழைக்கிறது…. மனிதநேய மக்கள் கட்சி.

வியாழன், 29 அக்டோபர், 2009

தேர்தல்களில் மீண்டும் வாக்குச் சீட்டு முறை: அதிமுக தீர்மானம்


தேர்தல்களில், மின்னணு இயந்திர வாக்கு முறையை மாற்றிவிட்டு வாக்குச்சீட்டு முறையை மீண்டும் கொண்டுவரவேண்டும் என்று அ.இ.அ.தி.மு.க. பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அ.இ.அ.தி.மு.க. பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா முன்னிலையில், கட்சித்தலைவர் மதுசூதனன் தலைமையில், சென்னையை அடுத்த வானகரம் ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி பேலஸ் திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது.
முதலில் செயற்குழு கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்துக்கு ஜெயலலிதா தலைமை தாங்கினார். இதில் செயற்குழு உறுப்பினர்கள் 190 பேர் உள்பட சுமார் 200 பேர் கலந்துகொண்டார்கள்.
பின்னர் பொதுக்குழு அவைத் தலைவர் மதுசூதனன் தலைமையில் நடைபெற்றது. பொதுச் செயலாளர் ஜெயலலிதா முன்னிலை வகித்தார். இதில் செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், சிறப்பு அழைப்பாளர்கள் என சுமார் 3 ஆயிரம் பேர் கலந்துகொண்டார்கள்.
கூட்டம் தொடங்கியதும் எம்.ஜி.ஆர். மன்ற மாநில செயலாளர் டி.ஜெயக்குமார் இரங்கல் தீர்மானத்தை வாசித்தார்.
கொள்கை பரப்பு செயலாளர் தம்பிதுரை வரவேற்று பேசினார். பொருளாளர் ஓ.பன்னீர்செல்வம் வரவு-செலவு அறிக்கை தாக்கல் செய்து பேசினார்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:
நதிநீர் இணைப்புத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.
* இந்தியாவில் யாருமே நிகழ்த்தி இராத அளவுக்கு, இந்திய அரசுக்கு ஒரு லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படும் அளவுக்கு மிகப்பெரிய ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பான மத்திய புலனாய்வுத்துறை விசாரணை நியாயமாகவும், சுதந்திரமாகவும் நடைபெற ஏதுவாக, உடனடியாக மத்திய தொலைதொடர்பு மந்திரி ராசாவை, பிரதமர் அமைச்சரவையில் இருந்து நீக்க வேண்டும்.
* மணல் கொள்ளை காரணமாக, தமிழகத்தின் நீராதாரங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கின்றன. பாலாறு, காவிரி, தாமிரபரணி, வைகை மற்றும் இதர ஆற்றுப் படுகைகளிலிருந்து தினந்தோறும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட லாரிகளிலும், கப்பல்களிலும் பகிரங்கமாக மணல் கடத்தப்படுவதன் காரணமாக அப்பகுதிகளில் நிலத்தடி நீர் குறைந்துவிட்டது. இதற்கு கண்டனம் தெரிவிக்கப்படுகிறது.
* விவசாய உற்பத்தி வெகுவாக குறைந்துள்ளது. இதனையடுத்து, அரிசி, பருப்பு வகைகள், சமையல் எண்ணை, சர்க்கரை போன்ற அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் கடுமையாக உயர்ந்துள்ளன. உணவுப் பஞ்சம் என்னும் அபாயத்தை நோக்கி தமிழ்நாடு சென்று கொண்டிருக்கிறது.
* இந்தியாவின் அண்டை நாடான சீனா, இந்தியாவுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளது. பாகிஸ்தானும் இந்திய எல்லைப் பகுதியில் தீவிரவாதிகளை ஊடுருவச் செய்யும் சதிச் செயலில் ஈடுபட்டு வருகிறது. இதுபோன்ற நிலையை சமாளிக்க தேசப்பற்றும், துணிவும் உள்ள தலைவர்கள் இந்த நாட்டிற்குத் தேவை.
இந்தியாவின் நலன் பறிபோகாமல் இருக்கத் தேவையான முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை இந்திய அரசு எடுக்க வேண்டும் என்றும், இந்திய நிலப்பகுதிகளை கபளீகரம் செய்ய துடிக்கும் சீனாவிடம் இந்திய அரசு மிகுந்த எச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டும் என்றும் இப்பொதுக்குழு மத்திய அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.
* நாடாளுமன்ற தேர்தலையடுத்து பா.ஜ.க., தெலுங்கு தேசம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி உள்பட பல்வேறு கட்சிகள் மின்னணு வாக்கு எந்திரங்களில் மோசடி நடத்த முடியும் என்பதற்கு ஆதரவாக குரல் கொடுத்தன. இது குறித்து அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திடம் முறையிட்டு உள்ளன.
மின்னணு வாக்கு எந்திரங்களில் மோசடியோ மாற்றமோ செய்யலாம் என்ற சந்தேகம் எழுந்துவிட்டால், மோசடி நடந்திருக்கிறது என்பதை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முன்போ அல்லது நீதிமன்றத்தின் முன்போ நிரூபிக்க எந்தவித வழிவகையும் இல்லை. மோசடி நடக்கவில்லை என்பதை நிரூபிப்பதும் இயலாத காரியம். நம் நாட்டில் பயன்படுத்தப்படும் மின்னணு வாக்கு எந்திரங்கள், வாக்கு பதிவானதற்கு இணையான அச்சு வெளியீட்டை (ஹார்டு காப்பி) உருவாக்குவது இல்லை. வாக்களிக்கும் சமயத்தில், மின்னணு வாக்கு எந்திரத்தில் செலுத்தும் வாக்குகளை சரிபார்க்கக் கூடிய அளவுக்கு அச்சிடப்பட்ட தகவலை உருவாக்காத வரையில், மோசடி குறித்த புகார்களின் உண்மைத் தன்மையை கண்டுபிடிக்க முடியாது.
ஜனநாயக நாட்டில் ஒவ்வொரு வாக்காளரும், தான் அளித்த வாக்கு அந்த வேட்பாளருக்கு அல்லது அந்தக் கட்சிக்குத் தான் சென்றடைகின்றதா என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும். இந்த நிலை இல்லாத பட்சத்தில், ஜனநாயக முறைகள் அனைத்தும் கேலிக்கூத்தாகவே இருக்கும்.
உண்மையான ஜனநாயகம் மீண்டும் மலர, மின்னணு வாக்கு எந்திரங்களுக்குப் பதிலாக மீண்டும் வாக்குச் சீட்டு முறையை நடைமுறைப்படுத்தவேண்டும் என இந்த பொதுக்குழு இந்திய தேர்தல் ஆணையத்தை வலியுறுத்துகிறது.
* 2009 பாராளுமன்ற தேர்தலின் போது முறைகேடாக நீக்கப்பட்ட 50 லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்காளர்களை மீண்டும் வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதற்கு, தமிழ்நாடு முழுவதும் வீடு, வீடாக சென்று தீவிர மறுஆய்வு மேற்கொண்டு வாக்காளர் பட்டியலை தயாரிக்க வேண்டும் என்றும், இறுதி வாக்காளர் பட்டியல் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்கு உரிய காலஅவகாசத்தோடு முன்கூட்டியே வழங்கப்பட வேண்டும் என்றும், இந்திய தேர்தல் ஆணையத்தை இப்பொதுக்குழு வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.
இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

1 கருத்து:

  1. மின்னணு வாக்குப்பதிவில் மோசடி சாத்தியமா ?

    http://manakkan.blogspot.com/2010/04/blog-post_04.html

    பதிலளிநீக்கு